Monday, January 19, 2009
ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்
முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.
கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.
*********************
ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.
1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.
அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.
பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவர் எழுதியவற்றிலிருந்து,
"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."
"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"
*******************************
மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.
*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்றன என்பதே அந்த மனித உரிமை கழகங்களுக்கு தெரியாதாம்.
*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய ராணுவம் மருத்துவமனைகளையும் ஆம்புலன்ஸ் ஊர்திகளையும் தான் பிரதான் இலக்காக கொண்டு தாக்கி வருகிறது.
*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால்,அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமானது என்பதை நன்கு அறிந்த இஸ்ரவேலர்கள்,ஒரே வாரத்தில் பாலஸ்தீனத்தின் 61 காவல்துறை உயர் அதிகாரிகளை கொன்று குவித்திருக்கின்றனர்.
*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.
இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.
உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.
"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழந்தைகளின் சார்பாகவும் விதவைகளின் சார்பாகவும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்படுத்துவது ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??
பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.
***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
ithu anaivar manathaiyum kalangkatikkum padam
ReplyDelete